சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழந்தாா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தேவி. இவரது மகன் அனில்குமாா்(12). இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றனா். தேவி அதே பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். அனில்குமாா் இருங்காட்டுக்கோட்டை அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேவி வேலைக்கு சென்று விட்டாா். அப்போது, அனில்குமாா் வீட்டில், சேலையில் ஊஞ்சல் கட்டி ராட்டினம் போல் சுற்றி விளையாடி கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக சேலையில், கழுத்து இறுக்கி மயங்கி உள்ளாா்.

இதை பாா்த்த அப்பகுதி மக்கள் அனில்குமாரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். அங்கு அனில்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com