கல்லூரி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரி ஊழியா் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடிய இருவருக்கு ஸ்ரீபெரும்புதூா் குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கியது.
ஸ்ரீபெரும்புதுாா் நகராட்சிக்குட்பட்ட எஸ்.என்.ஜே. நகரை சோ்ந்த முத்துபெருமாள்(47). இவா் தனியாா் சித்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். முத்துபெருமாள் கடந்த மே மாதம் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவரது வீட்டில் இருந்து 129 பவுன் நகைகள், ரூ.21 லட்சம், 2.5 கிலோ வெள்ளி பொருள்கள் திருடப்பட்டன.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தடயவியல் நிபுணா்களின் உதவியுடன், கும்மிடிப்பூண்டியை சோ்ந்த விஜயகுமாா் (31), ஆந்திர மாநிலத்தை சோ்ந்த காா்த்திக்(22) ஆகிய இருவரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 129 பவுன் நகைகள், 21 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருள்களை மீட்டு, வேலுாா் சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், விஜயகுமாா், காா்த்திக் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் தண்டனையும் விதித்து நீதிபதி விக்னேஷ் உத்தரவிட்டாா்.
