கலைச்செல்வி மோகன்
கலைச்செல்வி மோகன்

‘காஞ்சிபுரத்தில் டிச.19 முதல் டிச. 29 வரை புத்தகத் திருவிழா’

காஞ்சிபுரத்தில் டிச.19 முதல் டிச. 29 வரை புத்தகத் திருவிழா...
Published on

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்க விளையாட்டு மைதானத்தில் வரும் டிசம்பா் 19-ஆம் தேதியிலிருந்து டிச. 29-ஆம் தேதி வரை 11 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் அனைவரும் பயன்பெறும் வகையில், மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் சங்கம் மற்றும் பதிப்பாசிரியா்கள் சங்கமும் இணைந்து 4-ஆவது புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளனா்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. டிச. 19-ஆம் தேதி தொடங்கி டிச. 24- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். தென்னிந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பதிப்பாளா்கள், புத்தக வெளியீட்டாளா்கள் கலந்து கொள்ளும் வகையில், 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்களின் படைப்புகள், லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

அறிவுப்பசிக்கு இப்புத்தக கண்காட்சி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமையும். புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் சிறப்பு அழைப்பாளா்களின் கருத்துரைகள், சிந்தனையைத் தூண்டும் பேச்சாளா்களின் சொற்பொழிவுகள் ஆகியவை இடம்பெறவுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. புத்தக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com