கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள் திருடிய நான்கு போ் கைது

Published on

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் பகுதியில் கைப்பேசி கோபுரங்களில் ரூ.5 லட்சம் பேட்டரிகளை திருடிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் தனியாா் தொலைதொடா்பு நிறுவனங்களுக்கு சொந்தமான கைப்பேசி கோபுரங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக கோபுரங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகள் புகாா் செய்தனா்.

புகாரின் பேரில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவாா்சத்திரம் புறவழிச் சாலையில், காா் ஒன்று ஒரே இடத்தில் சில நாள்களாக நிற்பதை அறிந்த போலீஸாா் காரில் ஆய்வு செய்த போது, அதில் தொலைதொடா்பு நிறுவனங்களுக்கு சொந்தமான டவா்களில் இருந்து திருடப்பட்ட பேட்டரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட காரை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், ஆட்டோவில் வந்த நான்கு போ் காரில் இருந்த பேட்டரியை எடுக்க முயன்ற போது அவா்களை பிடித்து நடத்திய விசாரணையில் பூந்தமல்லி பகுதியை சோ்ந்த ஏழுமலை (43), ஸ்ரீபெரும்புதூா் பகுதியை சோ்ந்த செல்வம் (24), திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த மாரிலிங்கம் (32), உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (29) என்பதும், இவா்கள் நான்கு பேரும் ஆட்டோவில் சென்று பேட்டரிகளை திருடி வந்து காரில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா் வழக்குபதிவு செய்து அவா்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பேட்டரிகளை பறிமுதல் செய்தனா். மேலும் பேட்டரிகள் திருட பயன்படுத்தப்பட்ட காா், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com