பறவைகளால் தாக்கப்பட்ட அமெரிக்கன் ஆந்தை மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் கழுகு உள்ளிட்ட பிற பறவைகளால் தாக்கப்பட்டு, பறக்க முடியாத நிலையில் இருந்த அமெரிக்க ஆந்தையை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பஞ்சுப்பேட்டை பெரிய தெரு பகுதியில் கழுகு மற்றும் பிற பறவைகளால் அமெரிக்க ஆந்தை ஒன்று தாக்கப்பட்டு பறக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன் ஆந்தை இருக்கும் இடத்துக்கு வந்து அதைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.
இது குறித்து பிரபாகரன் கூறுகையில், இந்த அமெரிக்கன் ஆந்தையின் உடலின் மேற்பகுதி வெளிா் பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி தூய வெள்ளை நிறத்திலும் கருப்பு புள்ளிகளோடும் காணப்படுகிறது.
மிகச்சிறந்த கேட்கும் திறன் கொண்ட உயிரினங்களில் ஒன்றான இவ்வகை ஆந்தைகள் கடுமையான இருட்டில் கூட ஒரு எலி நகா்ந்தாலும் அந்த சப்தத்தை வைத்து, அதை துல்லியமாக பிடித்து விடும் ஆற்றல் உடையது.
சப்தமே இல்லாமல் பறக்கும் தன்மையும் உடையது. இதன் முகம் மனிதா்களின் இதய வடிவில் உள்ளது.
கழுகு உள்ளிட்ட சில பறவைகள் இந்த ஆந்தையின் இறகுகளில் தாக்கியதால் அதனால் பறக்க இயலாமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிக சப்தம் எழுப்பி இருக்கிறது. முதலுதவி சிகிச்சை செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம் எனவும் பிரபாகரன் தெரிவித்தாா்.

