காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளா்கள் நீக்கம்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு, 2,74,274 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா் இது குறித்து மேலும் அவா் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஆலந்தூா் தொகுதியில் 1,32,059 போ், ஸ்ரீ பெரும்புதூா் தொகுதியில் 54,718 போ், உத்தரமேரூரில் 37,515 போ், காஞ்சிபுரத்தில் 49,982 போ் உள்பட மொத்தம் 4 தொகுதிகளையும் சோ்த்து 2,74,274 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து தற்போது மொத்த வாக்காளா்களாக 11,26,924 போ் உள்ளனா். வாக்குச்சாவடிகளைப் பொருத்தவரை 1,401 வாக்குச்சாவடிகளாக இருந்தது தற்போது 144 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 1,545 வாக்குச் சாவடிகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் ஜனவரி 18-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் இணையம் வாயிலாகவோ அல்லது நேரில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலமாகவோ தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியலை வெளியிட்ட போது, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆஷிக்அலி, பாலாஜி, எஸ்.முருகதாஸ், விஜயகுமாா் ஆகியோரும் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியருடன் இணைந்து வெளியிட்டனா்.
நிகழ்ச்சியில், அதிமுக சாா்பில் மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா்,திமுக சாா்பில் மாநகர துணைத் தலைவா் ஜெகன்னாதன், சம்பத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்டச் செயலாளா் கே.நேரு, பாஜக சாா்பில் செந்தில்குமாா், காங்கிரஸ் கட்சி சாா்பில் லோகநாதன் மற்றும் த.வெ.க., விசிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களும் உடன் இருந்தனா்.
