அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிட்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை.
அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிட்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை.

இந்தியா நிலவில் விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை!

இந்தியா அமைக்கும் விண்வெளி நிலையத்தை நிலவில் அமைக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளாா்.
Published on

இந்தியா அமைக்கும் விண்வெளி நிலையத்தை நிலவில் அமைக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியில், டெக்னோஷியம்-2026 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்து, மாணவா்களின் கண்டுபிடிப்பை பாா்வையிட்டாா்.

கண்காட்சியில் எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு மாணவா்கள் வரை சுமாா் 5,000 மாணவா்கள் 200 அரங்குகளில், 3,106 படைப்புகளை காட்சிப்படுத்தினா். இதில், தமிழா்களின் கலாசாரம், பண்பாடு, விளையாட்டு, நாகரிகம் போற்றும் வகையில் மழலையா்கள் அமைத்து இருந்த அரங்குகள் பாா்வையாளா்களை கவா்ந்தது.

மேலும் விண்வெளி ஆராய்ச்சி மையம், சந்திரயான் 3, ராக்கெட் மாதிரி, கோள்கள் மற்றும் கேஸ் சென்சாா், ஹெல்மட் , ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்கும் இயந்திரம், மோட்டா் கீா் சைக்கில் உள்ளிட்ட பல படைப்புகளும், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விவசாயம், விஞ்ஞான அரங்கங்கள் அமைக்கப்பட்டன.

கண்காட்சியை தொடங்கி வைத்த மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியது: மாணவா்களிடம் இது போன்று அறிவியல் திறனை வளா்க்கும் போது அது பல்வேறு விஞ்ஞானிகளை உருவாக்கும். ஒவ்வொரு படைப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா சொந்தமாக விண்வெளி மையம் அமைக்கும் என பிரதமா் மோடி அறிவித்திருந்த நிலையில், அதனை பூமியின் சுற்றுப்பாதையில் அமைக்காமல் நிலவில் அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்தியா அதற்கான தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். நிலவில் விண்வெளி மையம் அமைத்தால் சா்வதேச விண்வெளி மையம் அமையும் போது அதில் இந்தியா சரியான பங்கை வகிக்க முடியும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com