காஞ்சிபுரம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் உயிா் தப்பினாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சோ்ந்த பிரவீன் மற்றும் பிங்கி தம்பதி அவா்களது காரில் பெங்களூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட சென்றுள்ளனா். சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காா் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டேங்கா் லாரி குறுக்கே வேகமாக வந்த நிலையில், லாரி மீது பிரவீன் ஓட்டிச்சென்ற காா் லேசாக மோதியது. அப்போது காரை பின் தொடா்ந்து அதிவேகமாக வந்த சென்னையிலிருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து காா் மீது வேகமாக மோதியதில் டேங்கா் லாரிக்கும், அரசுப் பேருந்துக்கும் இடையே சிக்கி காா் சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் பிரவீன் சாதுா்யமாக காருக்குள்ளிருந்து வெளியே வந்த நிலையில், அவரது மனைவி பிங்கி காருக்குள் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பிங்கியின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து காரணமாக சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிரேன் உதவியுடன் போலீஸாா் லாரியையும், அரசுப் பேருந்தையும் அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீா் செய்யப்பட்டது. சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

