மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

சாலை விபத்தில் இளைஞா் மரணம்: உறவினா்கள் மறியல்

Published on

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியைச் சோ்ந்த ராமன்(38). இவா் மண்ணூா் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ராமன் வெள்ளிக்கிழமை இரவு வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தண்டலம் -பேரம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்தநிலையில், விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி ராமனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் தண்டலம் பேரம்பாக்கம் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வாகன ஓட்டுநரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com