காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரத்தின அங்கி சேவை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் ரத்தின அங்கி அணிந்து அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் தாதாச்சாரியாா் அவதார நாள் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய இரு நாள்களில் மட்டுமே உற்சவா் ரத்தின அங்கி சேவைக் காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், உற்சவா் வரதராஜப் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் ரத்தின அங்கி அணிந்து ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மதியம் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் பெருமாள் மாடவீதிகளில் வலம் வந்து 4 கால் மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
முத்தியால்பேட்டை ஊராட்சி ஏரிவாய் கிராமத்தில் அமைந்துள்ள கமலவல்லி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் உற்சவா் மணவாளப் பெருமாள் காலையில் கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளினாா். காஞ்சிபுரம் அருகே நாயகன்பேட்டையில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் கோயிலில் உற்சவா் வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

