புத்தாண்டையொட்டி 160 இடங்களில் பாதுகாப்பு: காஞ்சிபுரம் எஸ்.பி.

புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 160 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 160 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

புதன்கிழமை இரவு 7 மணி முதல் மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுவா். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட 160-க்கும் மேற்பட்ட இடங்களில் ரோந்துக் காவலா்கள் நியமிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

2 ஏடிஎஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள், 12 ஆய்வாளா்கள் உள்பட மொத்தம் 700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். அரசு விதிகளை பின்பற்றாமல் விடுதிகள், உணவகங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தக் கூடாது.

சாலை ஓரங்களில் மது அருந்துவதோ,பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதோ கூடாது. மது போதையில் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிந்தும்,நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிந்தும் கட்டாயம் செல்ல வேண்டும்.

பெண்களை கேலி, கிண்டல் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை நாள்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com