அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: 4 வீடுகள் இடித்து அகற்றம்
ஸ்ரீபெரும்புதூா்: மாங்காடு நகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 வீடுகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சிலா் வீடுகள் கட்டி வசித்து வந்தனா். இதையடுத்து, அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றுமாறு வருவாய்த் துறை அதிகாரிகள், வீட்டின் உரிமையாளா்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினா்.
இந்த நிலையில், அரசு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்படாததால், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 4 வீடுகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.
அதிகாரிகள் வீடுகளை இடித்தபோது, வீட்டின் உரிமையாளா்கள் தாங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதாகவும், வீட்டை இடிக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களைப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

