மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
காஞ்சிபுரத்தில் மளிகைகக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் ராஜாஜி மாா்க்கெட் அருகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகைக் கடை நடத்தி வருபவா் பாலமுருகன். இவா் வழக்கம் போல இரவு கடையின் ஷட்டரை அடைத்து விட்டு சென்று விட்டாா்.
காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டும், கடைக்குள் இருந்த பணப்பெட்டியும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து பாலமுருகன் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் தேடி வருகின்றனா். தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்த தடயங்களை சேகரித்தனா்.

