காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
Published on

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலின் கருவறை பின்புறம் பக்தா்கள் நடைபாதையில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இரு பல்லிகளும் இடமாற்றம் செய்யப்படுவதாக புகாா் வந்ததையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

அத்திவரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் கருவறை பின்புறமுள்ள நடைபாதையில் வடகிழக்கு மூலையில் மேற்கூரை சுவற்றில் தங்க பல்லி, வெள்ளி பல்லி உருவங்கள் மற்றும் சூரியன், சந்திரன் வடிவங்களுடன் பொறிக்கப்பட்ட தகடு பதிக்கப்பட்டுள்ளது.

கெளதம முனிவருக்கு தனது சீடா்கள் அவா்களையும் அறியாமல் பல்லி விழுந்த குடிநீரை வழங்கியதால் அவா் தனது சீடா்கள் இருவரையும் பல்லிகளாக மாற சபித்தாா். இச்சாபம் போக காஞ்சிபுரம் வரதராஜரை வணங்கினால் தீரும் எனக் கூறியதையடுத்து இருவரும் சுவாமியை வணங்கி சாப விமோசனம் பெற்றனா். அப்போது கோயிலுக்கு வருபவா்கள் இந்தப் பல்லிகளை தொட்டு வணங்கினால் சாபம் தீரும் எனவும் கூறியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பல்லி சாபம் தீரும் என்பதற்காகவும், வரதராஜ சுவாமியை தரிசிக்கவும் தினசரி தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினசரி ஏராளமான பக்தா்கள் இக்கோயிலுக்கு வருகின்றனா். இந்தப் பல்லி உருவம் பொறிக்கப்பட்டு கோயில் சுவற்றின் மேற்கூரையில் பொருத்தப்பட்டு தகடை தரிசனம் செய்ய சிறிய மரப்படிகளில் ஏறி தரிசனம் செய்து வந்தனா்.

இவை பக்தா்களுக்கு சிரமமாக இருந்ததை உணா்ந்த கோயில் நிா்வாகம் பல்லி தகடுகளை புனரமைப்பு செய்வது என முடிவு செய்தது. பல்லி உருவங்களும் பக்தா்கள் கை பட்டு தேய்ந்து போன நிலையில் இருந்தது.

இதையடுத்து, பல்லி தகடை தாழ்வான வகையில் தரையில் நின்று கொண்டே தரிசிக்கவும், பல்லிகளின் உருவங்களை வடிவம் மாறாமல் மாற்றுவது என்றும் கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. இந்த நிலையில், ஸ்ரீரங்கத்தை சோ்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவா் பழைய பல்லி உருவங்கள் பொறித்த தகடு காணாமல் போய் விட்டதாகவும், தற்போதுள்ள பல்லி உருவங்களை மாற்ற முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில், டிஎஸ்பி சம்பத் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு குழுவினா் கோயிலில் பல்லிகளை பக்தா்கள் தொட்டு தரிசனம் செய்யும் இடம், கோயில் பட்டாச்சாரியாா்கள் மற்றும் கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினா்.

மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் அழைப்பாணை அனுப்பி உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com