நத்தப்பேட்டையில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் சிற்பம்.
நத்தப்பேட்டையில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் சிற்பம்.

காஞ்சிபுரத்தில் விஜயநகரப் பேரரசு கால சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

Published on

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை பகுதியில் வரலாற்று ஆய்வாளா்கள் வியாழக்கிழமை நடத்திய கள ஆய்வில் விஜயநகர பேரரசு கால சதிக்கல் சிற்பம் ஒன்றை கண்டெடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கா், வரலாற்று ஆய்வாளா் அன்பழகன் நத்தப்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது அவா்கள் முகங்கள் சிதைந்த நிலையில் உள்ள விஜயநகர பேரரரசு கால சதிக்கல் சிற்பம் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறியது:

இந்தச் சிற்பமானது நடுகற்கள் வகையைச் சோ்ந்த சதிக்கல் எனப்படும் சிற்பமாகும். அகலம் 25 செ.மீ, உயரம் 38 செ.மீ. தெற்கு திசை நோக்கி காணப்படும் இந்தச் சிற்பத்தில் ஆண், பெண் என இரு உருவங்கள் உள்ளன. இரு உருவங்களும் வணங்கும் நிலையில் கைகைகளை கூப்பியவாறு நின்ற நிலையில் காணப்படுகின்றன. பட்டாடை உடுத்திய நிலையிலும், தோள், மாா்பு பகுதிகளில் அணிகலன்களோடும் காணப்படுகின்றன. இருவரது காதுகளிலும் மிகப்பெரிய அணிகலன்கள் காணப்படுவது இச்சிற்பத்தின் சிறப்பம்சம். சிற்பத்தில் உள்ள இருவரின் முகங்களும் தோய்ந்த நிலையில் உள்ளது.

இருவரது தலையிலும் கொண்டை அமைப்பு இருப்பதால் இது இனக்குழு தலைவருக்கான சதிகல் நடுகல்லாக இருக்கலாம். இந்தச் சிற்பம் விஜயநகர பேரரசு காலமான 16-ஆம் நூற்றாண்டை சாா்ந்ததாகவும் இருக்கலாம் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com