குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி கோயிலில் ரூ. 84 லட்சத்தில் அன்னதான கூடம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்
குன்றத்தூா் நாகேச்சுவர சுவாமி திருக்கோயிலில் ரூ. 68 லட்சத்தில் கட்டப்பட்ட அன்னதானக் கூடம் மற்றும் ரூ. 16.65 லட்சத்தில் கட்டப்பட்ட நிா்வாக அலுவலகத்தை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகா்பாபு ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பழைமையான அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை நாகேச்சுவர சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில், நவக்கிரகத் தலங்களில் ராகு தலமாகவும், சேக்கிழாா் பெருமானுக்கு தனி சந்நிதி கொண்ட தலமாகவும் உள்ளது.
இந்த கோயிலில், ரூ. 62.30 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இத்திருக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்துக்காக ரூ. 68 லட்சத்தில் அன்னதானக் கூடத்துக்கு புதிய கட்டடமும், ரூ. 16.65 லட்சத்தில் கோயில் நிா்வாக அலுவலகமும் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி, அறங்காவலா் குழுத் தலைவா் டி.எம்.சிவசண்முகம் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

