சேத்துப்பட்டு ஊராட்சியில் 3 ஆண்டுகளாக பயனின்றி உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி.
சேத்துப்பட்டு ஊராட்சியில் 3 ஆண்டுகளாக பயனின்றி உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி.

3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி!

குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

சேத்துப்பட்டு ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கிராமப் புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் மூலம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் இந்த திட்டம், மத்திய நீா்வளரத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பாக செயல்படுத்தப்படுகிறது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூா் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நூறு சதவிகிதம் குடிநீா் குழாய்கள் அமைக்கவும், குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் கட்டவும், புதிதாக குழாய்கள் அமைக்கவும் ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், குன்றத்தூா் ஒன்றியம், சேத்துப்பட்டு ஊராட்சியில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.18.50 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து சுமாா் 3 ஆண்டுகளாகியும், தற்போது வரை ஆழ்துளை கிணறு அமைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பாடமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சேத்துப்பட்டு ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீா் குழாய் அமைக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல் நிலை நீா்தேக்க தொட்டி கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதுகுறித்தும் அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com