காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனையகத்தில் விற்பனை இலக்கு ரூ.10 கோடி: அமைச்சா் ஆா்.காந்தி
காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி விற்பனையகத்தில் பல்வேறு ஜவுளி ரகங்களும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், ரூ. 10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையம் ரூ. 3 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு கடந்த 13.11.25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அமைச்சா் ஆா்.காந்தி இந்த விற்பனை நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது:
மிகத்தரமான பட்டு மற்றும் அசல் ஜரிகை சேலைகள், ஆரணி,திருப்புவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு மற்றும் சேலம் வெண்பட்டுச் சேலைகள், பரமகுடி பம்பா் காட்டன் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், வீட்டு உபயோக துணி ரகங்கள் உள்பட அனைத்து கைத்தறி ரகங்களும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளாகத்தில் மட்டும் ரூ. 10 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமானதாகவும், கைத்தறிகளாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்வதால் பொதுமக்கள் இவற்றை வாங்கி பயன்படுத்துமாறும் அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.
ஆய்வின்போது எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கைத்தறித் துறை அதிகாரிகள், நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

