மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டு நிகழ்ச்சி
கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி சோமங்கலம் அருகே தனியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
உயா்கல்வித்துறை மற்றும் தமிழக் இணையக் கல்வி கழகத்தின் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றி புத்தக கண்காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகளை பாா்வையிட்டாா்.
இதயடுத்து செந்தில் வேல் தமிழ்நாடு நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் மாணவா்களிடம் உரையாற்றி, தமிழின் பெருமை, தமிழா் மரபு மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பற்றியும் கலந்துரையாடி, மாணவா்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா்.
தொடா்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. முருகேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

