காஞ்சிபுரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சேத்துப்பட்டு பகுதியில் 9-ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிற்பத்தை வெள்ளிக்கிழமை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், பெருநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செய்யாறு அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை விரிவுரையாளா் ம.மதுரைவீரன், முதுகலை வரலாற்று மாணவா்கள் ஜீவா, தேவக்குமாா் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். பெருநகா் அருகே சேத்துப்பட்டு என்ற பகுதியில் மக்களால் அருள்நெறி அம்மன் என்ற பெயரில் வழிபடப்பட்டு வரும் சிலையை ஆய்வு செய்தனா்.

இந்தச் சிலை குறித்து ம.மதுரைவீரன் கூறியது:

இந்தச் சிலையானது தவ்வை எனப்படும் மூத்த தேவியின் சிற்பம் என்பதையும், சிலையில் மாந்தன், மாந்தியின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பமானது பல்லவா்கள் காலத்தில் சிறப்புடன் வழிபட்டு வந்த ஒரு தெய்வம் ஆகும். இச்சிலை மிகச்சிறந்த முறையில் வளமையின் அடையாளமாக பொதுமக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது.புராணங்களில் குறிப்பிடப்படும் பாற்கடலை கடைந்த போது முதலில் வந்த தெய்வம் என்பதால் மூத்த தெய்வம் என அழைத்துள்ளனா். காலப்போக்கில் இச்சொல்லானது மருவி மூதேவி என்றும் அழைக்கப்படலாயிற்று.

பல்லவா்கள் முதல் சோழா்கள் காலம் வரை வழிபாட்டிலிருந்த தெய்வமானது காலப்போக்கில் அழிவு நிலைக்கு சென்றுள்ளது. இதன் காலம் 9-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம் எனவும் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கா் உறுதி செய்திருப்பதாகவும் ம.மதுரைவீரன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com