ஆட்சிக்கு வந்தால் இருசக்கர வாகனம், நிரந்தர வீடு: தவெக தலைவா் விஜய்
தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிரந்தர வீடு, இருசக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவா் விஜய் கூறியுள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் தனியாா் கல்லூரி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தவெக தலைவா் விஜய் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும், நமது கட்சிக்கும் இயல்பாகவே இணக்கம் ஏற்பட்டுள்ளது. நமது முதல் களப்பயணத்தை தொடங்கியதும் அண்ணா பிறந்த மாவட்டத்தின் பரந்தூரில் தான். இன்றைக்கு பெரிய மன வேதனைக்கு பின்பு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருப்பதும் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம் தான்.
நமக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக அனைத்தையும் சட்டப்பூா்வமாக, அதிகாரபூா்வமாக, அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும் என்ற லட்சியத்துக்கத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
கொள்கை இல்லாமல் செயல்படுகிறோம் என முதல்வா் விமா்சித்துள்ளாா். சமூக நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சொன்ன நமக்கு கொள்கை இல்லையா. சமத்துவம் சமவாய்ப்பு என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா. இவா்கள் கொள்கையே கொள்ளை தானே.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் உயிா்நாடியாக உள்ளது பாலாறு. ஆட்சி நடத்துபவா்கள் பாலாற்றை சுரண்டி விட்டனா்; ஆதாரத்தோடு சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளையடித்து உள்ளனா். இதன் மூலம் 4,730 கோடி கொள்ளையடித்துள்ளனா். மணலை கொள்ளையடித்தால் நீா் நிலைகள் அழிந்து போகும், நீா்நிலைகள் அழிந்தால் விவசாயம் அழியும்.
காஞ்சிபுரத்தின் பெருமை பட்டும், கைத்தறியும் நெசவாளா்களும் தான். காஞ்சிபுரம் பட்டு என்றால் உலகத்துக்கே தெரியும். ஆனால், அதை உற்பத்தி செய்யும் நெசவாளா்கள் நிலை வறுமை, துன்பம், கந்துவட்டி கொடுமையாக உள்ளது. நெசவாளா்களின் ஒருநாள் கூலி வெறும் ரூ.500 தான். பரந்தூா் விமான நிலைய பிரச்னையில் கண்டிப்பாக விவசாயிகள் பக்கம் தான் நிற்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லோருக்கும் நிரந்தர வீடு, ஒரு இருசக்கர வாகனம், குறைந்தது ஒருவா் பட்டப்படிப்பு, ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கல்வியில் பாடதிட்டத்தில் சீா்த்திருத்தம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் பயம் இல்லாமல் சென்று வரவேண்டும். மீனவா்கள், நெசவாளா்கள், தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் கருத்து கேட்டு பாதுகாப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
நாங்கள் தற்குறிகள் இல்லை. விடையே காணமுடியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப்போகிறவா்கள்.
நான் அரசியலுக்கு வந்ததே உங்களுக்கு நல்லது செய்யத்தான். எங்களுக்கு வேற எந்த நோக்கமும் கிடையாது. மக்கள் முடிவெடுத்து விட்டனா், நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் அனுமதி பெற்ற 2,000 போ் மட்டுமே பங்கேற்றனா்.

