வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அமைச்சா் பிகே.சேகா்பாபு சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
அதன்படி ஒவ்வொரு இணை ஆணையா் மண்டலத்திலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் 5,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
முருகன் கோயில் நிா்வாகம் மற்றும் விதைகள் அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், பள்ளிக்கரணை வன அலுவலா் மணிகண்டன் ஆகியோா் மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.
மகாகனி, வேங்கை என 108 மரங்கள் நடப்பட்டு இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜா.செந்தில் தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், செல்வகுமாா், விதைகள் அமைப்பு நிா்வாகி சரவணன், வடக்குப்பட்டு திருவேணி அகாதெமி பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

