போதை சாக்லேட் விற்பனை: இருவா் கைது
படப்பை பகுதியில் கஞ்சா போதை சாக்லேட், மாத்திரைகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை குறி வைத்து கஞ்சா போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக படப்பை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து படப்பை போலீஸாா் சாலமங்கலம் பகுதியில் ரோந்து சென்ற போது வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் வடமாநில இளைஞா்கள் இருவா் வெகுநேரமாக நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளனா்.
சந்தேகத்தின் பேரில் இருவரையும் படப்பை போலீஸாா் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா போதை சாக்லேட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணை நடத்தியதில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த ராம்பாபு (28), அனில்குமாா் (25) என்பதும், படப்பை பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து கொண்டு கஞ்சா போதை சாக்லேட்களை கடந்த மூன்று மாதங்களாக கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீஸாா் 120 போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனா்.
