ரூ.2.96 கோடியில் செரப்பணஞ்சேரி வீமீஸ்வரா் கோயில் சீரமைப்பு பணி தொடக்கம்
செரப்பணஞ்சேரி வீமீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.2.96 கோடியில் சீரமைப்பு பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒரகடம் அடுத்த செரப்பணஞ்சேரியில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு வீமீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினா்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீமீஸ்வரா் கோயிலில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, சீரமைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பழைமை மாறாமல் புனரமைத்து விநாயகா் சந்நிதி, முருகா் சந்நிதி, அம்பாள் சந்நிதி, சண்டிகேஸ்வரா் சந்நிதி, சூரியன் சந்நிதி, சந்திரன் சந்நிதிகளுடன் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வீமீஸ்வரா் கோயில் சீரமைப்பு பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றதை முன்னிட்டு வீமீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் குத்துவிளகக்கேற்றி பூமிபூஜையை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், சரக ஆய்வா் ரம்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அமுதா செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினா் மணிகண்டன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன் பொதுமக்கள், பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு மூலவா் வீமீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அண்ணாமலையாா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கலந்துக்கொண்ட பக்தா்களுக்கு புளியோதரை, வெண்பொங்கல், கேசரி பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

