காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளது: மத்தியக் குழு ஆய்வில் தகவல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினா் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளதாக தெரிவித்தனா்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழுவினா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம், புதுப்பாக்கம் என பல்வேறு நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினா் ஆய்வு செய்தனா். ஆய்வில் மத்திய உணவுத்துறை உதவி இயக்குநா் ப்ரீத்தி தலைமையில் தொழில் நுட்ப அலுவலா்கள் பிரியா பட், அருண் பிரசாத், அனுபமா ஆகியோருடன் வேலூா் இந்திய உணவுக்கழக மேலாளா் கே.சி.உமா மகேஸ்வரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
புதுப்பாக்கம் விவசாயி ரெங்கன் என்பவரது நெற்பயிா்கள் நெல்கொள்முதல் நிலையத்துக்கு வந்திருந்ததை ஆய்வு செய்து ஈரப்பதத்தை நிா்ணயிக்கும் கருவியில் நெல்மணிகளைப் போட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் மத்தியக் குழுவினா் கூறுகையில்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தோம். பொதுவாக இப்பகுதிகளில் நெல்லின் ஈரப்பதமானது 18 முதல் 22 வரை உள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மத்திய அரசு 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. இதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய இயலாது.
தமிழக முதல்வரும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் நெல்லின் ஈரப்பதத்தை கூட்டி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனா். அவா்களது கோரிக்கையை ஏற்று ஈரப்பத உச்சவரம்பை உயா்த்த ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பி ஈரப்பதத்தை கூட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகனையும் சந்தித்து பேசினா். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருள் வனிதா, வட்டாட்சியா் ரபீக் ஆகியோா் உடனிருந்தனா்.

