காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் நெமந்தக்காரத் தெருவில் அமைந்துள்ளது பழனி ஆண்டவா் திருக்கோயில். இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கடந்த 22-ஆம் தேதி வீரவாகு காப்புக்கட்டு உற்சவத்துடன் விழா தொடங்கியது. விழா நடைபெற்ற 6 நாள்களும் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 5-ஆம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள் மூலவா் தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதையடுத்து, 6-ஆவது நாள் நிகழ்வாக திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதியில் உள்ள அரசகாத்த அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், கோயிலின் முன்பாக அசுரா்களை சண்முகப் பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை மூலவா் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் கோயில் வளாகத்தில் தெய்வானை திருக்கல்யாணமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.
வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப் பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் திருமணக் கோலத்தில் திருவீதியுலா வந்தனா்.
இதையடுத்து, புதன்கிழமை (அக். 29) மாலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் வீதியுலாவுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

