சித்தேரியில் வளா்ப்புக்காக 82,000 மீன் குஞ்சுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் நடவடிக்கை
உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னாத்தூா் ஊராட்சி ஆலப்பாக்கம் சித்தேரியில் மீன்வளத்துறை சாா்பில் வளா்ப்புக்காக 82,000 மீன்குஞ்சுகள் விடும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா் ஆகியோா் மீன்குஞ்சுகளை வளா்ப்புக்காக விட்டனா்.
இதன் பின்னா் ஆட்சியா் கூறுகையில் கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திட மீனவா் நலத்துறை சாா்பில் ஊரக வளா்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரமேரூா் வட்டாரத்துக்கு உட்பட்ட 86.5 ஹெக்டோ் பரப்பளவில் ஆலப்பாக்கம் சித்தேரி, பினாயூா் ஏரி, எலப்பாக்கம் ஏரி, ரெட்டை மங்கலம் ஏரிகளில் மொத்தம் 1,73,000 மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகின்றன.
இதன் அடிப்படையில் ஆலப்பாக்கம் சித்தேரியில் 41 ஹெக்டோ் பரப்பளவில் 82,000 மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் க.சசிகலா மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,மீன்வளத்துறை அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

