தனியாா் கிடங்கில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

Published on

ஸ்ரீபெரும்புதூா் என்ஜிஓ குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தின் பழைய பொருள்கள் கிடங்கில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட என்ஜிஓ குடியிருப்பு பகுதியில் தனியாா் தொழிற்சாலைகளுக்கு சோப் ஆயில், பினாயில் உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் வழங்கும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கு உள்ளது. வியாழக்கிழமை கிடங்கின் ஒருபகுதி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. ரசாயன பொருள்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத்துறையினா் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும், பொருள்கள் தீயில் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com