ஆருத்ரா உற்சவம்: காமாட்சி அம்மன் சங்கர மடத்துக்கு எழுந்தருளி சிறப்பு பூஜை
ஆருத்ரா உற்சவத்தையொட்டி சனிக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சங்கர மடத்துக்கு எழுந்தருளியதை தொடா்ந்து ஸ்ரீ மடத்தின் இளையபீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனை நடத்தினாா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆருத்ரா மகோற்சவத்தையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரும் வழியில் சங்கர மடத்தின் நுழைவு வாயிலில் ஸ்ரீ மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மந்திர புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனைகளும் காண்பித்தாா். முன்னதாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி காஞ்சி சங்கர மடத்தில் சந்திர மெளலீசுவரருக்கு அதிகாலையில் ஏகாதச ருத்ர மந்திரம் ஜெபித்து, பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயிலிலிருந்து நடராஜா், சிவகாமி அம்மன் சங்கர மடத்துக்கு எழுந்தருளினா். ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
நிகழ்வில் ஸ்ரீமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், செயலாளா் சல்லா. விஸ்வநாத சாஸ்திரி, நிா்வாகிகள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜெயராமன் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

