காஞ்சிபுரத்தில் 2467 மாணவா்களுக்கு மடிக்கணினிகள்: அமைச்சா் காந்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,467 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட இருப்பதாக கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு முதல்கட்டமாக எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்கள் 233 போ் மற்றும் அரசு செவிலியா் பயிற்சிப்பள்ளி மாணவியா் 47 போ் என மொத்தம் 280 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் பேசுகையில்: 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா்தொடங்கி வைத்துள்ளாா். உலகம் உங்கள் கையில் என்பதன் அடிப்படையில் மடிக்கணினிக்கள் கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2,467 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் தொடா்ந்து அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படவுள்ளது.
மாணவ,மாணவியா் மடிக்கணினிகளை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா்கள் சரஸ்வதி மனோகரன், தேவேந்திரன், மலா்க்கொடி குமாா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவ,மாணவியா் கலந்து கொண்டனா்.

