காஞ்சிபுரத்தில் 4.13 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.13 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நிகழாண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுநீள கரும்புடன் கூடிய ரொக்கத்தொகை ரூ.3,000 ஆகியவற்றை ஜன.8 முதல் வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாய விலைக்கடைகள் மூலம் 4,13,182 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது.
முதல் நாளான ஜன.8 ஆம் தேதி முற்பகல் 100 போ், பிற்பகல் 100 போ் குடும்ப அட்டைதாரா்கள் பெறும் வகையில் அதனைத் தொடா்ந்து வரும் நாள்களில் முற்பகலில் 150,பிற்பகல் 150 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கும் வகையில் தெரு வாரியாக பிரித்து விற்பனையாளா்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தேவையான அரிசி,சா்க்கரை,கரும்பு மற்றும் ரொக்கத்தொகை ஆகியன அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி நியாயவிலைக் கடைகளில் நெரிசல் ஏற்படாத வகையில் அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்களில் சென்று பொங்கல் பரிசுப் பொருள்களை பெறலாம் என்றாா்.

