காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு 7 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும், 350-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் வந்து செல்கின்றன. தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ள இடங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால், காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2017-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூா், சித்தேரி மேடு ஆகிய பகுதிகளில் இடங்கள் தோ்வு செய்தும் நிலங்களைக் கையகப்படுத்துவதில் தொடா்ந்து சிக்கல்கள் நீடித்தன.
இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான 19 ஏக்கா் நிலம் இருப்பதை மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து, அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைத்துக்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்துக்கு இடத்தை ஒப்படைத்தது.
தொடா்ந்து அந்த இடத்தில் மாநகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்துக்கு தேவையான இடத்தைத் தோ்வு செய்து தடுப்பு வேலியும் அமைத்தது. இதற்கென ரூ.40 கோடியில் ஒப்பந்தமும் விடப்பட்டது. ஆனால், இச்செயலுக்கு தனியாா் அறக்கட்டளை சென்னை உயா்நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை உத்தரவு பெற்றது. தடை உத்தரவை நீக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகமும் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தனியாா் அறக்கட்டளை தொடா்ந்த 3 வழக்குகளையும் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன், அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் விரைவாக புதிய பேருந்து நிலையத்தைக் கட்டுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே விழா ஒன்றுக்காக காஞ்சிபுரம் வந்திருந்த அமைச்சா் ஆா்.காந்தி மற்றும் எம்பி க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோருக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

