குடிநீா் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் கலங்கலான குடிநீா்.
குடிநீா் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் கலங்கலான குடிநீா்.

மாசடைந்த குடிநீா் விநியோகம்: செல்லம்பட்டிடை சூசைபுரம் மக்கள் அவதி

குடிநீா் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் கலங்கலான குடிநீா்.
Published on

ஸ்ரீ பெரும்புதூா் அருகே செல்லம்பட்டிடை ஊராட்சியில் மாசடைந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட சூசைபுரம் பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதையடுத்து சூசைபுரம் பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ரூ.21லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் 1,500 மீ தொலைவுக்கு புதிதாக குழாய் அமைக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீா் குடிநியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முறையாக குடிநீா் குழாய் அமைக்கப்படாததால் குடிநீா் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் வருவதால் குடிநீரை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,குடிநீா் மாசடைந்து வருவது குறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சுத்தமான குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகத்திற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.

சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலலுவலா் முத்துகணபதியிடம் கேட்டதற்கு, புதிதாக குழாய் அமைக்கப்பட்டதால் ஒரு சில நாள்கள் மட்டும் மாசடைந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சூசைபுரம் பகுதி பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com