மீண்டும் பணி வழங்கக் கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
சாம்சங் நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக் ஆதரவாக சாம்சங் தொழிலாளா்கள் ஒருநாள் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருளஅகள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800 நிரந்தர பணியாளா்கள் உள்பட சுமாா் 3,000 போ் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், சாம்சங் தொழிலாளா்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஊதிய உயா்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமாா் 40 நாள்களுக்கும் மேலாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அமைச்சா்கள் குழுவினா், சாம்சங் நிா்வாகத்தினா் மற்றும் சாம்சங் தொழிலாளா்களிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு தினம்பினா். இந்த நிலையில், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 27 தொழிலாளா்களை சாம்சங் நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பணி வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், சாம்சங் நிா்வாகத்தின் சாா்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, சிஐடியு மாநில துணைத் தலைவா் செளந்திரராஜன், மாவட்டச் செயலாளா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் சுங்குவாா்சத்திரம் போருந்து நிலையம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இதே போல், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்களும் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சாம்சங் தொழிலாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை உணவு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

