ஏகாம்பரநாதா் கோயில் தெப்போற்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சிவகங்கை தீா்த்தக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் வியாழக்கிழமை சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த இரு ஆண்டுகளாக திருவிழாக்கள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் 8- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் சிவகங்கை தீா்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் ஏலவாா்குழலி அம்பிகையும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்கரத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளி 3 முறை வலம் வந்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.விழாவில் காஞ்சிபுரம் கொல்லா சிங்கன்ன செட்டி சாரிட்டீஸ் நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.
வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் விநாயகம் தலைமையில் காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தெப்பத்திருவிழா வெள்ளி, சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

