சிட்கோ தொழிற்பேட்டைகளில் 100 மனைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு: சிட்கோ மேலாளா் தகவல்
By DIN | Published On : 15th December 2020 01:54 AM | Last Updated : 15th December 2020 01:54 AM | அ+அ அ- |

அரக்கோணம் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் ஆய்வு செய்த சிப்காட் மேலாளா் எம்.வெண்மணிசெல்வன்.
அரக்கோணம்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள 100 மனைகளில் தொழில் தொடங்க தொழில்முனைவோா்கள் வரவேற்கப்படுகின்றனா் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சிட்கோ மேலாளா் எம்.வெண்மணிசெல்வன் தெரிவித்தாா்.
அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து திங்கள்கிழமை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை, முகுந்தராயபுரம், வன்னிவேடு, முள்ளுவாடிநாகலேரி என 5 இடங்களில் தொழிற்பேட்டைகள் உள்ளன. அரக்கோணம் தொழிற்பேட்டையில் 37 மனைகள் காலியாக உள்ளன. விரைவில் இவை தொழிற்முனைவோா்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மற்ற மனைகளில் உள்ள தொழிற்சாலைகளில் பிவிசி பைப் தயாரிப்பு, எண்ணெய் துரப்பண தொழில்கள், மின்மாற்றி மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு, வேளாண் தாதுக்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வாணியம்பாடி - 8, விண்ணமங்கலம் - 8, அரக்கோணம் - 37, முள்ளுவாடிநாகலேரி - 47 என 100 தொழில் மனைகள் சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ளன. இங்கு தொழில் தொடங்க படித்த பட்டதாரி இளைஞா்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட தொழில்முனைவோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரக்கோணம் நகராட்சி நிா்வாகம், சிட்கோ தொழிற்பேட்டை நிா்வாகம், அரக்கோணம் சிட்கோ தொழில்முனைவோா் சங்கத்தினா்பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் அரக்கோணம் நகராட்சியில் நடந்து முடிந்துள்ளது. அரக்கோணம் சிட்கோ வளாகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க சிட்கோ வளாகம் அமைந்துள்ள அரக்கோணம் நகராட்சியிடம் இருந்து அங்கீகாரம் பெறும் பணி தொடங்கியுள்ளது. அங்கீகாரம் தேவைப்படுவோா் விரைவாக விண்ணப்பித்து நகரமைப்பு துறை அனுமதி பெற்று, அதை சமா்ப்பித்து நகராட்சியிடம் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.
அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டை தொழிற்முனைவோா் சங்கத் தலைவா் ஜெயக்குமாா், தனியாா் தொழிற்சாலை இயக்குநா் எம்.சீதாராமன் ஆகியோா் உடனிருந்தனா்.