அரக்கோணம் பழனிபேட்டை- மாா்க்கெட் பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்
By DIN | Published On : 24th December 2020 11:19 PM | Last Updated : 24th December 2020 11:19 PM | அ+அ அ- |

அரக்கோணம்: அரக்கோணம் பழனிபேட்டை- மாா்க்கெட் பகுதியை இணைக்க ரூ. 80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி மனு அளித்தாா்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரில் சென்ற அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அங்கு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸை சந்தித்தாா். அப்போது அரக்கோணம், புளியமங்கலம், இச்சிபுத்தூா் ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் சில வசதிகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தாா். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை புகா் ரயில்களில் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்; அரக்கோணம் நகரம் பழனிபேட்டையையும் மாா்க்கெட் பகுதியையும் இணைக்க தமிழக சட்டப் பேரவையில் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முன்மொழியப்பட்ட பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரக்கோணம் ரயில் நிலையத்தில் 3, 4, 5ஆவது நடைமேடைகளை நீட்டிக்க வேண்டும்; இச்சிபுத்தூா் ரயில் நிலைய நடைமேடைகளை உயா்த்தி, அங்கு அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல வழிவகை செய்ய வேண்டும்; புளியமங்கலம் ரயில் நிலைய சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள முறையற்ற பொது அறிவிப்பு சேவை முறையை விரைவான நடவடிக்கை மூலம் சரி செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பவ்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
மனுவை வாசித்த பொதுமேலாளா் ஜான் தாமஸ், அனைத்து கோரிக்கைகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். எம்எல்ஏவுடன் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி, பொதுச் செயலாளா் எஸ்.விஜயன், சங்க ஒருங்கிணைப்பாளா் துரை.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...