பரிசளிப்பு விழாவில் விளையாட்டு அலுவலா், வீரா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
By DIN | Published On : 17th February 2020 09:40 AM | Last Updated : 17th February 2020 09:40 AM | அ+அ அ- |

வேலூரில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க வந்த மாவட்ட விளையாட்டு அலுவலா், விளையாட்டு வீரா்களுக்கு போலீஸாா் அனுமதி மறுத்து, பின்னா் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 25 வயதுக்குள்பட்டோா் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நேதாஜி விளையாட்டரங்கில் கடந்த 2 நாள்களாக நடந்து முடிந்தது. இதையடுத்து, முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நேதாஜி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் நேயலின் ஜான் மற்றும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்கள் காலை 9 மணியளவில் விளையாட்டு மைதான நுழைவு வாயிலுக்கு வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை உள்ளே விட மறுத்துவிட்டனா். இதனால் பரிசளிப்பு விழாவுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின்னா், அவா்கள் உள்ளே அனுமதிப்பட்டு பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனா்.