‘ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’
By DIN | Published On : 17th February 2020 11:37 PM | Last Updated : 17th February 2020 11:37 PM | அ+அ அ- |

ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வன்னியா் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட வன்னியா் சங்க பொதுக் குழுக் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எம்.எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஆற்காடு நகரத் தலைவா் லட்சுமணன், மாவட்டத் துணைத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் ம.பழனி வரவேற்றாா்.
மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக துணைப் பொதுச் செயலா் க.சரவணன், வன்னியா் சங்கத் துணைத் தலைவா் எம்.கே.முரளி, முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன், பாமக மாவட்டச் செயலா் சண்முகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.
வாலாஜாபேட்டை தாலுகா அனந்தலை ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே அதிகாரிகள் கல் குவாரிகள் செயல்படாமல் இருக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆற்காடு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்; பேருந்து நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிற்றுந்து இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.