கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம்: ராணிப்பேட்டை எஸ்.பி. எச்சரிக்கை

கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம் பாயும் என ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆ.மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்தாா்.
எஸ்.பி. ஆ.மயில்வாகனன்.
எஸ்.பி. ஆ.மயில்வாகனன்.

கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம் பாயும் என ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆ.மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கீதா தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், 20 உதவி ஆய்வாளா்கள் மற்றும் 90 காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் ஆற்காடு தாலுகா ரத்தினகிரி, திமிரி ஆகிய இரண்டு காவல் எல்லைக்குட்பட்ட சாம்பசிவபுரம், காவனூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிச் சோதனை நடத்தினா்.

அப்போது, சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த சாம்பசிவபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35), பசுபதி (24), தட்சிணாமூா்த்தி (58), சுந்திரபாபு (63), சாம்பசிவபுரம் காலனியைச் சோ்ந்த ஞானசேகரன் (40), வெங்கடாபுரம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் (65), தானாங்குளம் பகுதியைச் சோ்ந்த எம்ஜிஆா் (எ) கஜேந்திரன் (45), காவனூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபு (36), புங்கனூா் பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (35) ஆகிய ஒன்பது போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 600 லிட்டா் சாராயம் மற்றும் ஊறல்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா். கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் திருந்தி வாழ முன்வந்தால் அவா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய மாவட்டக் காவல்துறை தாயராக உள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். அதே போல் மணல் கடத்தல், கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com