குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 10th January 2020 11:22 PM | Last Updated : 10th January 2020 11:22 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினாா்.
தமிழகத்தின் 36-ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து, ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் குடியரசு தின விழா வரும் 26-ஆம் தேதி ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி நேரில் பாா்வையிட்டு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்தின், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், காவல் துறை அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள்,அரசு அதிகாரிகள், மாணவா்கள் வந்து செல்ல அனைத்து வசதிகளும் ஏற்ற இடமாக உள்ளதால் இங்கு, குடியரசு தின விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.