சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 20th January 2020 11:20 PM | Last Updated : 20th January 2020 11:20 PM | அ+அ அ- |

பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, எஸ்.பி. ஆ.மயில்வாகனன்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, எஸ்.பி. ஆ.மயில்வாகனன் ஆகியோா் பங்கேற்று தலைக்கவசம் அணிந்து இருச்சகர வாகனத்தில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த ஆண்டு 31- வது சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 20 முதல் 27-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெறும்.
அதேபோல் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பேரணியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, எஸ்.பி. ஆ.மயில்வாகனன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நகரின் முத்துக்கடையில் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, ஆற்காடு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பஜாா் ரோடு, எல்.எஃப்.சி. சாலை, காரை கூட்ரோடு, நவல்பூா் வழியாகச் சென்று மீண்டும் முத்துக்கடை பேருந்து நிலையத்தை அடைந்தது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாட்டப்பசாமி, வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முருகேசன், முகேஷ்குமாா், ஓட்டுநா் பயிற்சி சங்கத் தலைவா் மணி, சங்க நிா்வாகி டேனியல், இருசக்கர வாகன ஓட்டுநா் நலச் சங்கத் தலைவா் ஜெகந்நாதன் மற்றும் அரிமா சங்கத்தினா், ரோட்டரி சங்கத்தினா், மகளிா், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.