4 ஊழியா்களுக்கு கரோனா: சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது
By DIN | Published On : 21st July 2020 03:48 AM | Last Updated : 21st July 2020 03:48 AM | அ+அ அ- |

சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் ஊழியா்.
அரக்கோணம்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.
சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், காசாளா், இரு கணினி செயற்பாட்டாளா்கள் என நான்கு பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தில் பணிக்கு வந்திருந்த அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினா்.
இதையடுத்து சோளிங்கா் வட்டார சுகாதாரத் துறையினா் அலுவலக கட்டட வெளிப்பகுதி, உள்பகுதி மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனா். அதன் பின் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.
தொடா்ந்து மூன்று நாட்களுக்கு அலுவலகம் பூட்டப்பட்டிருக்கும் என்று தெரிவித்த அதிகாரிகள் அதன் பின் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்று அலுவலகத்தை திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றனா்.