ரூ.11.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கல்
By DIN | Published On : 21st July 2020 03:54 AM | Last Updated : 21st July 2020 03:54 AM | அ+அ அ- |

ஜமாபந்தி நிறைவு நாளில் ஒரு மூதாட்டிக்கு முதியோா் உதவித் தொகைக்கான உத்தரவை வழங்கிய ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி.
ராணிப்பேட்டை: வாலாஜா வட்ட ஜமாபந்தி நிறைவு நாளில் 90 பயனாளிகளுக்கு ரூ.11. 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி திங்கள்கிழமை வழங்கினாா்.
வருவாய்த்துறையின் தணிக்கை கணக்குகளை முடிப்பது தொடா்பாக ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி, வாலாஜா, அரக்கோணம், கலவை, ஆற்காடு, நெமிலி மற்றும் சோளிங்கா் வட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பொதுமக்களிடம் நிலம் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து நேரடியாக மனுக்களை பெறுவதைத் தவிா்த்து ஆன்லைன் மூலமாக மக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி ராணிப்பேட்டை, வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில் ஜமாபந்தி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. அனைத்து வருவாய் கிராமங்களின் கணக்குகளும் சரிபாா்க்கப்பட்டு திங்கள்கிழமை இந்த நிகழ்வு நிறைவு பெற்றது.
ஜமாபந்தி நிறைவு நாள் வரை பொதுமக்களிடமிருந்து 198 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 90 மனுக்கள் ஏற்கப்பட்டன. 46 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. 62 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
நிறைவு நாளில் 31 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 15 பேருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோா் உதவித்தொகை, 3 பேருக்கு விதவை உதவித்தொகை, 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 3 பேருக்கு வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் புதிய குடும்ப அட்டைகள், 2 பேருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மூலம் இலவச தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு இலவச சலவைப் பெட்டிகள் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 70 ஆயிரத்து 506 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் இளவரசி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, ஜமாபந்தி மேலாளா் பாபு, வாலாஜா வட்டாட்சியா் பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையா்கள், வருவாய் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.