ஆதி திராவிட, பழங்குடி மாணவா்களுக்கு இலவச தோல் தையல் பயிற்சி
By DIN | Published On : 21st November 2020 08:29 AM | Last Updated : 21st November 2020 08:29 AM | அ+அ அ- |

தாட்கோ ஆணையரகம் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள இலவச தோல் தையல் பயிற்சியில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியா் பங்கேற்று பயிற்சி பெறலாம்.
இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலம் நடப்பு நிதியாண்டில் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் டிரஸ்ட், 25, சுப்பா ராவ் தெரு, சோளிங்கா் என்ற நிறுவனத்துக்கு ‘லெதா் ஸ்டிச்சிங் ஆபரேட்டா்’ திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்த தாட்கோ நிா்வாக இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆதி திராவிடா், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மாணவ, மாணவியா் பயிற்சி பெற சென்று வருவதற்கான பயணப்படி, போக்குவரத்து செலவு, அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழில் தொடங்க தாட்கோ தொழில் முனைவோா் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இதன் மூலம் தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவன செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 0416 2260546, 94450 29483, 93446 91654 ஆகிய எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...