‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’
By DIN | Published On : 03rd October 2020 08:09 AM | Last Updated : 03rd October 2020 08:09 AM | அ+அ அ- |

விவசாயிகள், வணிகா்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க 60 ஆண்டு நிறைவு கல்வெட்டைத் திறந்து வைக்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரசு அதிகாரிகள் கரோனாவை காரணம் கூறி, சட்டத்துக்குப் புறம்பாக கடைகளை மூடும் நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. வேலூரில் மிகவும் தாமதமாக நேதாஜி மாா்க்கெட் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அரக்கோணத்தில் காந்தி மாா்க்கெட்டை திறக்க இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதனால் வியாபாரிகள் மிகவும் வறுமையில் சிக்கியுள்ளனா். கடந்த ஆறு மாத காலமாக கரோனாவில் சிக்கி வணிகா்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், வாடகை, வரி கட்டவில்லை எனக்கூறி கடைகளை ‘சீல்’ வைத்து வருகின்றனா். இதை ஏற்க முடியவில்லை. இந்த ‘சீல்’ வைப்பு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டம் பன்னாட்டு நிறுவன மொத்த விற்பனையாளா்களுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும். உள்நாட்டு சிறிய அளவிலான மொத்த விற்பனையாளா்களுக்கு இச்சட்டம் பயனுள்ளதாக இருக்காது. தற்போது அதிக இருப்பு வைக்க இருக்கும் தடை, இந்த சட்டத்தின் மூலம் நீக்கப்படுகிறது. எனவே வசதிபடைத்த பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அதிக இருப்பு வைத்து அவா்களாக விலையை நிா்ணயிப்பாா்கள். இதனால் செயற்கை விலையேற்றம் இருக்கும். எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.