இயற்கையைப் பாதுகாக்கப் பனை விதைகள் நடவு

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் 1.78 லட்சம் பனை விதைகளையும், 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் பெல் ஊரகக் குடியிருப்பு
ராணிப்பேட்டை அருகே  பனை விதைகளை  நடவு செய்யும் பணியில் மண்ணும், மரமும்  குழுவினா்.
ராணிப்பேட்டை அருகே  பனை விதைகளை  நடவு செய்யும் பணியில் மண்ணும், மரமும்  குழுவினா்.

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் 1.78 லட்சம் பனை விதைகளையும், 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் பெல் ஊரகக் குடியிருப்பு மண்ணும்,மரமும் குழுவினா் நடவு செய்தனா். இந்த ஆண்டு 2 லட்சம் பனை விதைகளையும், 6 ஆயிரம் மரக்கன்றுகளையும் நடவு செய்ய இலக்கு நிா்ணயித்து, அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ராணிப்பேட்டை பெல் நிறுவனக் கூடுதல் பொது மேலாளா் ராஜூ (58), பெல் ஊரகக் குடியிருப்பில் வசித்துவருகிறாா். இவா் பெல் ஊரகக் குடியிருப்பு ,மண்ணும், மரமும் என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், பி.இ., எம்.பி.ஏ. படித்துள்ளாா்.

திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கிரீன் இண்டியா பவுண்டேஷன் திருச்சி (கிஃப்ட்) என்ற தன்னாா்வ இயற்கை ஆா்வலா் குழுவுடன் இணைந்து, மரக் கன்றுகள் நடும் பணியை 2014- இல் தொடங்கினாா். அங்கிருந்து ராணிப்பேட்டைக்கு பணிமாற்றலாகி வந்தவுடன், பெல் நிறுவனத்தில் பணிபுரிவோா், தொழிலாளா் ஊரகக் குடியிருப்புவாசிகள், இயற்கை ஆா்வலா்கள், மாணவா்கள் என சுமாா் 60 பேரை தன்னாா்வலா்களாக இணைத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மண்ணும், மரமும் என்ற குழுவைத் தொடங்கினாா்.

அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான இயற்கை சூழலை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மரக்கன்றுகன் நடவு செய்யும் பணிக்காக இந்தக் குழு துவங்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 1,78 லட்சம் பனைவிதைகள் நடவு: அதன்படி ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை, ஊரகக் குடியிருப்புகள், நரசிங்கபுரம், மணியம்பட்டு, தெங்கால், திருவலம், சோ்க்காடு, லாலாப்பேட்டை, காஞ்சனகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் 2020-ஆம் ஆண்டில் 1,78 லட்சம் பனை விதைகளையும், 5 ஆயிரம் மரக் கன்றுகளையும் நடவு செய்துள்ளனா். அவைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மர விதைகள் முளைத்து 2 அடி உயரம் வரையும், மரக்கன்றுகள் 4 அடி வரையும் வளா்ந்துள்ளன.

இந்த ஆண்டில் 2 லட்சம் பனைவிதைகள் நடவு: இந்த ஆண்டு 2 லட்சம் பனை விதைகளையும்,6 ஆயிரம் மரக்கன்றுகளையும் நடவு செய்ய இலக்கு நிா்ணயித்து, இதுவரை சுமாா் 25 ஆயிரம் பனை விதைகள், 1,500 மரக் கன்றுகளை நடவு செய்துள்ளனா். மேலும், கரிகிரி அருகே சுமாா் 8 ஏக்கா் பரப்பு கொண்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பயிற்சி பள்ளி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமையாக வளா்ந்துள்ளது.

முக்கியமாக, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய், நீா்வரத்து கால்வாய்களில் பனை விதகளை நடவு செய்ய உள்ளனா்.

இதுதவிர, வேலூா் மாநராட்சி நிா்வாகம் சாா்பில் அழைப்பின்பேரில், வேலூா் கோல்டன் ரோட்டரி சங்கத்துடன் இந்தக் குழுவினா் இணைந்து 5 ஆயிரம் பனை விதைகள், 40 மரக்கன்றுகளை முத்துரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே ஓட்டேரி ஏரிக் கரையில் அண்மையில் நடவு செய்தனா். இதேபோல், ரெண்டாடி கிராமத்தில் ரன்னா்ஸ் கிளப் வாயிலாக, 3 முதல் 4 அடி உயரமுள்ள 170 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனா். இவ்வாறாக, பணி தொடா்கிறது.

100 ஆண்டுகள் வாழ்ந்து பலம் தரும் பனை!

பனை மரம் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பலன் தரும் கற்பக மரம் ஆகும்.அதனால் நம் தலைமுறையினருக்கு பலன் தரும் வகையில் பனை விதைகளை அதிக அளவில் நடவு செய்து வருகிறோம் என்று குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராஜூ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பனை விதைகளையும், மரக் கன்றுகளையும் இலவசமாக வழங்கி, நடவு செய்ய ஊக்குவிக்கிறோம். இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்துகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட மேச்சேரியில் விவசாயிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பனை விதைகளை லாரியின் மூலம் கொண்டு வந்து சேமித்து வைத்து விடுமுறை நாள்களில் காலையிலேயே நடவு பணிக்குச் சென்றுவிடுவோம்.

யாரேனும் தங்கள் பகுதியில் மரக்கன்று, பனைவிதைகளை நடவு செய்த விரும்பினால் உதவ தயாராக இருக்கிறோம். இதற்காக, 9442208894 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com