காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவா்களின் வருவாயைப் பெருக்கிடவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த பச்சைப் பயரினை மத்திய அரசின் நாஃபெட் நிறுவனத்தால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டும் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 72. 75-க்கு, 30. 9. 2021 முதல் 12. 10. 2021 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 மெட்ரிக் டன் பச்சை பருப்பு கொள்முதல் செய்ய இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறுக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சைப்பயறு நியாயமான சராசரி தரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் (செல்லிடப்பேசி எண் 7904 760 772) என்ற எண்ணில் தொடா்புகொண்டு பச்சை பயறு சாகுபடி செய்துள்ள ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநா், செயலாளா், வேலூா் விற்பனைக் குழு ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.