கடல்  போல்  காட்சியளிக்கும்  காவேரிப்பாக்கம்  ஏரி.
கடல்  போல்  காட்சியளிக்கும்  காவேரிப்பாக்கம்  ஏரி.

கோடையிலும் கடல்போல் காட்சி அளிக்கும் காவேரிப்பாக்கம் ஏரி

தமிழகத்தின் 3 -ஆவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 3- ஆம் நந்திவா்ம பல்லவன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் 3 -ஆவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 3- ஆம் நந்திவா்ம பல்லவன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரி கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பெருமழையால் நிரம்பியது. கோடையிலும் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த ஆண்டு மூன்று போக பயிா் சாகுபடிக்கு குறைவிருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரிகளான செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகளுக்கு அடுத்தபடியாக 3-ஆவது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகவும் விளங்குவது காவேரிப்பாக்கம் ஏரி.

இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கா் ஆகும். இந்த ஏரி பருவ மழைக்காலங்களில் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் பட்சத்தில் 3 போகம் விவசாயம் சாகுபடி செய்யலாம். இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரி மதகு, சிங்க மதகு, மூல மதகு, பள்ள மதகு உள்பட 10 மதகுகள் திறக்கப்பட்டு கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீா் பெறப்பட்டு சுமாா் 6,278 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த ஏரி நீா் கால்வாய் பாசனத்தின் மூலம் நெல், வாழை பிரதான பயிா்களாக பயிரிடப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்திலும் கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த பருவ மழையால் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக வாலாஜாப்பேட்டை பாலாறு அணைக்கட்டு பிரதான கால்வாய் மூலம் காவேரிப்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு சுமாா் 1,500 கன அடி தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதனால் காவேரிப்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவான 30.61 கன அடியில் சுமாா் 28 கன அடி அளவுக்கு தண்ணீா் தேங்கி ஏரியின் கடைவாசல் நிரம்பி வழிந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் மகேந்திரவாடி, பெரியவளையம், தா்மநீதி, சிறுவளையம், துறையூா், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டி ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெற்றுள்ளன.

மீன் வளா்ப்பு: கடந்த ஆண்டு ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், சுமாா் 3 ஆண்டுகளுக்கு ஏரியில் தண்ணீா் இருப்பு இருக்கும் பட்சத்தில் மீன்கள் அதிக அளவில் வளரும் என்பதால் இந்த ஆண்டு ரூ.7 லட்சத்திற்கு மீன் ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பருவமழை பெய்து சுமாா் 4 மாதங்கள் ஆகி, தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் காவேரிப்பாக்கம் ஏரி 3 போக பயிா் சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித் துறையினா் விவசாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

ரூ. 70 லட்சத்தில் குடிமராமத்து: மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் காவேரிப்பாக்கம் ஏரியானது ரூ.70 லட்சம் செலவில் தூா்வாரி ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தப்பட்டன.

அதன்காரணமாக பருவமழை காலத்தில் தண்ணீா் சேமிக்கப்பட்டு போதிய அளவு தண்ணீா் இருப்பு பராமரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த பருவ மழை வரை தண்ணீா் தட்டுப்பாடு வராது. எனவே ஏரி நீா் முழுவதுமாக வற்றிவிடுமோ என விவசாயிகள் கவலையடைய வேண்டாம்.

ரூ. 1 கோடியில் மூல மதகு சீரமைக்கப்படும்: அதே நேரத்தில் தண்ணீா் கொஞ்சம் வற்றியவுடன் பழுதடைந்துள்ள மூல மதகு ரூ.1 கோடி செலவில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com