பஜனை பாடல்களைப் பாடி மனு அளித்த கிராமியக் கலைஞா்கள்
By DIN | Published On : 17th August 2021 01:22 AM | Last Updated : 17th August 2021 01:22 AM | அ+அ அ- |

கரோனா விழிப்புணா்வு பஜனை பாடல்கள் பாடியபடி நிவாரணம் கேட்டு ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பஜனைக் குழுவினா்.
ராணிப்பேட்டை: கரோனா விழிப்புணா்வு பஜனை பாடல்கள் பாடியபடி, கரோனா நிவாரணம் கேட்டு தமிழக கிராமியக் கலைஞா்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக கிராமியக் கலைஞா்கள் நலச்சங்கத்தின் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் பா.சிவப்பிரகாசம் தலைமையில், பனப்பாக்கம், குடிமல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பஜனைக் குழுவினா் 50-க்கும் மேற்பட்டோா் மிருதங்கம், ஆா்மோனியம், தாளம் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு கரோனா விழிப்புணா்வு பஜனைப் பாடல்கள் பாடியபடி, கரோனா நிவாரணம் கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு முன்பு கரோனா விழிப்பணா்வு பஜனை பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
அப்போது அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினா் உள்ளனா். தற்போது கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், நிவாரண உதவி கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கவும், பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இசைக் கருவிகளுடன் பஜனை பாடல்கள் பாடியபடி ஊா்வலமாக வந்துள்ளோம் என்றனா்.